சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள 5,039 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பாரிய அளவிலான பழச் செய்கையை முன்னெடுப்பதற்கான புதிய வர்த்தக விவசாயத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், இதுவரை முறையாகப் பயன்படுத்தப்படாத மேட்டுநிலப் பகுதிகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த வர்த்தக விவசாய நிலங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் தகவலின்படி, மாம்பழம், கொய்யா, வாழைப்பழம், பப்பாளி மற்றும் பாசிப்பழம் உள்ளிட்ட ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பழ வகைகளைப் பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இதனுடன் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான சிறிய நீர்த்தேக்கக் கட்டமைப்புகளும் புனரமைக்கப்படவுள்ளன.
இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று புதன்கிழமை (11) அநுராதபுரத்தில் நடைபெற்றுள்ளன. இதில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அநுராதபுரத்தில் அமைந்துள்ள அறுவடைக்குப் பிந்தைய முகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவனம் மற்றும் சி வங்கி வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்களில், திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பழ மரங்கள் முழுமையான விளைச்சலைத் தரும் வரை ஆரம்பகாலங்களில் விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையில் இடைப்பயிர்ச் செய்கைக்கும் ஊக்கமளிக்கப்படவுள்ளது.
இதன்படி, மிளகாய், நிலக்கடலை, தர்பூசணி, பச்சைப்பயறு மற்றும் எள் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய விவசாய நிலங்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும், தேவைக்கேற்ப நீரை விநியோகிக்கும் அழுத்தக் குழாய் கட்டமைப்புகள் மூலம் நீர் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நீர் முகாமைத்துவத்தை வினைத்திறனாகவும் காலநிலைக்கு உகந்த வகையிலும் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமத்திய மாகாண பிரதான கால்வாய்த் திட்டம் நிறைவடையும் வரை, தெரிவுசெய்யப்பட்ட நீர்த்தேக்கக் கட்டமைப்புகளில் ஏற்கனவே உள்ள நீர் மூலங்களைப் பயன்படுத்தி மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க வர்த்தக விவசாய அபிவிருத்தித் திட்டம் (CAD) நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே வர்த்தக விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சுமார் 2,000 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பயிர்களின் தரத்தை மேம்படுத்துதல், விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் இலங்கையின் விவசாய உற்பத்திகளை சர்வதேச சந்தையின் கேள்விக்கு ஏற்ப தயார்ப்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








