மேல் மாகாணத்திற்குள் பயணிகள் பஸ்களுக்கான வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பஸ் தொழில்துறையினர் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வந்த வழித்தட அனுமதிப்பத்திரப் புதுப்பிப்பு நடைமுறையை, இம்மாதம் முதலாம் திகதி முதல் மாதாந்தம் மேற்கொள்வதற்கு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, பஸ்களுக்கான வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பித்து வருகின்றது.
எனினும், இந்த நடைமுறைக்கு எதிராக சுமார் 10 முதல் 12 வருடங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றத்தில் தமக்குச் சாதகமான தீர்ப்பொன்று கிடைத்துள்ளதாகவும், தற்போது அந்தத் தீர்ப்பு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குப் பதிலாக, நியாயம் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் புதுப்பிக்கப்பட வேண்டிய வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிப்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும், ஒவ்வொரு மாதமும் அதற்கான ஆவணங்களைத் தயாரித்து சமர்ப்பிப்பது சிரமமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிச் சான்றிதழ் ஆகியன வருடாந்தம் வழங்கப்படும் நிலையில், வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாத்திரம் மாதாந்தம் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு காணப்படும் நிலையில், இவ்வாறான நடவடிக்கை அநீதியானது எனத் தெரிவித்த அவர், இதனால் பஸ் உரிமையாளர்கள் மாத்திரமன்றி பயணிகளும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.








