இலங்கையின் 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்காக முழுமையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 100 புதிய அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு 1.72 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நன்றி தெரிவித்துள்ளார்.
அவசர அம்புலன்ஸ் சேவையை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட ஹர்ஷ டி சில்வா, இந்த அறிவிப்பு தனக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஒரு தந்தை தனது பிள்ளையின் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைவதைப் போன்ற உணர்வே இந்தச் செய்தியைக் காணும்போது எனது மனதில் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சுவசெரிய சேவை தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என்பதே தனது ஒரே விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு பங்களித்த இந்திய அரசாங்கத்திற்கும் ஏனைய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை ஊழியர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சாதாரண இலங்கையர்களுக்கு இந்தச் சேவை ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பு குறித்து தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் முக்கியத்துவம் ஏற்கனவே பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சுவசெரிய சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவசர மருத்துவ உதவிகளை விரைவாக வழங்குவதற்கும் மேலதிகமாக 100 அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கான சுமார் 1.72 பில்லியன் ரூபா நிதியுதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை இடையே நேற்று முன்தினம் (11) கைச்சாத்திடப்பட்டது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராகப் பதவி வகித்தபோது, 2015ஆம் ஆண்டு நவீன அவசர மருத்துவப் பதிலளிப்பு முறைமையை முன்மொழிந்ததன் மூலம் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை உருவாக்குவதில் ஹர்ஷ டி சில்வா முக்கிய பங்காற்றினார்.
இந்தியாவின் ஆரம்பகட்ட 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ், 88 அம்புலன்ஸ்கள் மற்றும் அவசர அழைப்புப் பதிலளிப்பு மையம் ஆகியவற்றுடன் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், இந்தியாவின் மேலதிக 15.02 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் நாடளாவிய ரீதியில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது 1990 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில், சுவசெரிய சேவை 24 மணிநேரமும் இலவச அவசர அம்புலன்ஸ் சேவையாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








