அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உறுதிமொழிகள், செலவினங்கள் மற்றும் ஒட்டுமொத்த செயற்பாடுகளைக் கண்காணிக்கும் நோக்கில் புதிய இணையத்தளமொன்று நேற்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
oversight.lk எனும் இந்த இணையத்தளம், நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களில் அரசாங்கம் முன்வைத்த உறுதிமொழிகளின் அடிப்படையில் அதன் செயற்பாடுகளைப் பொதுமக்கள் மதிப்பீடு செய்வதற்கும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளைக் கண்காணிப்பதற்கும் இந்த இணையத்தளம் உதவும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதில், முந்தைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அமுலாக்க நிலை, அமைச்சுகள் ரீதியான செயற்பாட்டு முன்னேற்றம், அரச நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகளின் கண்டறிதல்கள் மற்றும் அரசாங்கத்தின் வருமானம், செலவினங்கள் தொடர்பான பகுப்பாய்வுத் தரவுகள் உள்ளிட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் நிதிச் செலவினங்கள், நிதி முகாமைத்துவம் மற்றும் வரவு செலவுத் திட்ட உறுதிமொழிகளின் அமுலாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான தகவல்களைப் பொதுமக்கள் அணுகும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய வரவு செலவுத் திட்டங்களின் அமுலாக்கம் தொடர்பில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன், அமைச்சுகளின் செலவினங்கள், திட்டங்களின் அமுலாக்கம் மற்றும் பயன்படுத்தப்படாத நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விரிவான தகவல்களையும் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அரசாங்கம் செயல்திறன் அடிப்படையிலான வரவு செலவுத் திட்ட முறையைப் பின்பற்றுவதால், குறித்த தகவல்களைத் தொகுப்பதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.







