கொழும்பின் உணவு உலகம் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் முடிவடைந்துவிடுவதில்லை. புதிய உணவகங்கள், நவீன தேநீர் விடுதிகள், வீடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் உணவுத் தொழில்கள் என நாள்தோறும் பல்வேறு புதிய சுவைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன.
இவ்வாறு புதிதாக உருவாகும் உணவகங்களையும், பலருக்கும் தெரியாத தனித்துவமான உணவு மையங்களையும் தேடிக் கண்டறிவதில் உள்ள ஆர்வமே உணவு சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்கி வரும் ரஹா டீனின் பயணத்திற்கான முக்கியத் தூண்டுதலாக அமைந்துள்ளது. ஹலால் உணவு மையங்கள் முதல் புதிதாகத் தோன்றும் உணவகங்கள் வரை கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று, அங்குள்ள உணவுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்.
தன்னைத் திரையில் முன்னிலைப்படுத்தாமல், உணவுகளுக்கும் அவற்றின் பின்னணியில் இயங்கும் உணவகங்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து உள்ளடக்கங்களை உருவாக்குவது இவரது தனித்துவமாகும்.
கொழும்பின் உணவுச் சுவைகளைத் தேடிச் செல்வதற்கான ஆர்வம், TikTok தளத்தின் பங்களிப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் சுவாரஸ்யமானவை.
அடிப்படையில் உணவின் மீதான ஆர்வமே இவரை இந்தத் துறையை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது. கொழும்பில் தரமான ஹலால் உணவுகள் கிடைக்கும் இடங்களை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இவரது பயணம் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்பத்தில் தான் சுவைத்த உணவுகளின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிய அவர், பின்னர் கொழும்பின் பரந்த உணவு உலகை ஆராயும் ஒரு விரிவான பயணத்தை முன்னெடுத்துள்ளார். இதன் மூலம் பல்வேறு உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்துள்ளன.
உணவுத் தேடலுக்கு வழிகாட்டும் TikTok
ஒரு சுவையான உணவின் குறும்படமோ அல்லது புகைப்படமோ சமூக வலைத்தளங்களில் சாதாரணமாக உலாவும் ஒருவரைக்கூட தனது அடுத்த உணவைத் திட்டமிடத் தூண்டிவிடும். அந்த வகையில், புதிய உணவகங்களையும் வீட்டு அடிப்படையிலான உணவு வணிகங்களையும் கண்டறிவதற்கும் அவற்றை அதிகளவிலான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் TikTok சிறந்த தளமாக அமைந்துள்ளதாக ரஹா குறிப்பிடுகிறார்.
இத்தளத்தின் ‘For You’ பக்கம், தேடல் வசதிகள் மற்றும் ‘colombofood’, ‘cafesincolombo’ போன்ற பொருத்தமான ஹேஷ்டேக்குகள் ஊடாகப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவு மையங்களை இலகுவாகக் கண்டறிய முடிகிறது. அதேவேளை, உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தேடல் பகுப்பாய்வுக் கருவிகளும் இத்தளத்தில் உள்ளன.
ரஹா டீன் போன்ற படைப்பாளர்களுக்கு இத்தகைய வசதிகள் தங்களது கண்டுபிடிப்புகளை உணவுப் பிரியர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. பொதுவான ஹேஷ்டேக்குகளை மாத்திரம் பயன்படுத்தாமல், ஒவ்வொரு காணொளியின் கருப்பொருளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் குறிச்சொற்களைப் பயன்படுத்துமாறு TikTok பரிந்துரைக்கிறது.
மேலும், மக்கள் எத்தகைய விடயங்களைத் தேடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கும் எதிர்கால உள்ளடக்கங்களுக்கான புதிய யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் TikTok இன் ‘Creator Search Insights’ கருவி படைப்பாளர்களுக்கு உதவுகிறது.
சிறு உணவு வணிகர்களுக்கு வெளிச்சம்
கொழும்பின் உணவுக் கலாசாரம் என்பது பிரபலமான பெரிய உணவகங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பல தனித்துவமான உணவுச் சுவைகள் சிறிய வீடுகளிலும் தெருவோரச் சிறு கடைகளிலும் மறைந்திருக்கின்றன.
இத்தகைய சிறு வணிகர்களின் உணவுகளையும் அவர்களின் உழைப்பையும் குறும்படங்கள் ஊடாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பார்வையாளர்களுக்கு புதிய உணவு அனுபவங்களை அறிமுகப்படுத்துவதுடன், அந்த வணிகர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுக்கொடுக்கவும் உதவுகிறது.
குறிப்பாக, அதிகளவில் விளம்பரப்படுத்தப்படாத சிறிய உணவு வணிகங்களுக்குச் சமூக வலைத்தளங்கள் ஊடாகக் கிடைக்கும் வெளிப்பாடு அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமையக்கூடும். அந்த வகையில், மறைந்திருக்கும் உணவுச் சுவைகளை வெளிக்கொண்டு வருவதையே ரஹா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளார்.
எதிர்காலத் திட்டங்கள்
எதிர்காலத்தில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் பல ஹலால் உணவு மையங்களைக் கண்டறிந்து, அதிகம் அறியப்படாத சிறிய உணவு வணிகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த அவர் விரும்புகிறார்.
அதேவேளை, வெளிப்படையான மற்றும் நேர்மையான விமர்சனங்கள் ஊடாக உணவுப் பிரியர்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதும் அவரது நோக்கமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்கிற்காக உலாவும் ஒருவரைப் புதிய உணவுச் சுவையைத் தேடிச் செல்லத் தூண்டுவதுடன், உள்ளூர் சிறு வணிகர்களுக்கு ஆதரவளிப்பதிலும் இத்தகைய உள்ளடக்கப் படைப்பாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக அமைகிறது.
ரஹா டீன் போன்ற படைப்பாளர்களின் தொடர்ச்சியான தேடலும் முயற்சியும் கொழும்பின் மறைந்திருக்கும் உணவுச் சுவைகளையும் சிறு வணிகங்களையும் டிஜிட்டல் உலகின் வழியாகப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கின்றன.












