கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (11) முற்பகல் 11.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு வெளியேற்றப்படவுள்ளதாகப் பொறுப்புப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.15 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 701.3 மீற்றராகப் பதிவாகியிருந்தது. இது வான் மட்டத்தை விட 1.7 மீற்றர் குறைவாகும்.
எனினும், நிலவும் மழையுடனான வானிலை மற்றும் எதிர்வரும் நாட்களில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யக்கூடிய மழைவீழ்ச்சி தொடர்பான வளிமண்டலவியல் கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தைக் குறைத்து தாழ்நிலப் பகுதிகளில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வான் கதவுகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொத்மலை அணைக்கட்டுக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொறுப்புப் பொறியியலாளர் அறிவுறுத்தியுள்ளார்.








