புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை இந்திய மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் நுகர்வோருக்கு ஆண்டுதோறும் சுமார் 3,540.38 கோடி இந்திய ரூபாய் சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய மத்திய மருந்துகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், சுகாதார சேவைகள் இயக்ககம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிபுணர் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 121 மருந்து வகைகளின் கீழ் உள்ள 1,364 புற்றுநோய் மருந்துகளுக்கான புதிய விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்தியாவிலுள்ள 85 முன்னணி மருந்து நிறுவனங்கள் தமது தயாரிப்புகளுக்கான திருத்தப்பட்ட விலைப் பட்டியல்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளன.
இந்த விலைக் குறைப்பின் மூலம் சுமார் 679 மருந்து வகைகளின் விலைகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சில மருந்துகளின் விலைகள் அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக விலையுடைய புற்றுநோய் மருந்துகளை ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாக மருந்தகங்களோ அல்லது வைத்தியசாலை மருந்தகங்களோ கட்டணம் அறவிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் தாங்கள் கொள்வனவு செய்யும் மருந்துகளின் சரியான விலையை, மருந்துப் பொதிகளில் அச்சிடப்பட்டுள்ள புதிய சில்லறை விலை மூலமாகவோ அல்லது ‘பார்மா சஹி தாம்’ (Pharma Sahi Daam) கைப்பேசி செயலி மற்றும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாகவோ சரிபார்த்துக்கொள்ள முடியும்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகப் பணம் அறவிடப்பட்டாலோ அல்லது விலை தொடர்பான முறைப்பாடுகள் காணப்பட்டாலோ, ‘பார்மா ஜன் சமாதான்’ (Pharma Jan Samadhan) இணையத்தளம் அல்லது 1800-111-255 என்ற இலவச தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








