பிரான்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டல் கட்டமைப்புகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகளை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய சைபர் பிரிவு ஒன்றை இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரான்ஸ் அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல்களால் பல்பொருள் அங்காடிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன், பெருமளவிலான உணவுப் பொருட்களும் வீணாகியுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், ஈரான் தூதுவர் அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய மட்டத்தில் ஈரானுக்கு எதிராகத் தடைகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையே மேற்கொண்டதாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ‘ஷஹீத் காவே’ (Shahid Kaveh) என்ற தாக்குதல் நோக்கிலான சைபர் பிரிவின் தலைவர் மற்றும் அவரது இரு பிரதித் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச கைது உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பாரிஸ் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தீவிரத்தைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள பாரோட், பிரான்ஸ் மண்ணில் நாசவேலை நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய சைபர் தாக்குதல் இதுவெனத் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் நலன்களுக்கும் பிரான்ஸ் மக்களின் பாதுகாப்புக்கும் எதிரான பாரிய தாக்குதல் எனவும், இதற்குப் பதிலளிக்காமல் இருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசாரணைகளின்படி, தாக்குதலாளர்கள் பாரசீக மொழியையும் ஈரானில் அமைந்துள்ள சாதனங்களுடன் தொடர்புடைய இணைய நெறிமுறை முகவரிகளையும் (IP Addresses) பயன்படுத்தியுள்ளனர்.
இதன்போது, பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டல் கட்டமைப்புகளுக்கான இணைய அணுகலைப் பெற்ற தாக்குதலாளர்கள், இரவு நேரங்களில் அவற்றின் வெப்பநிலையைத் தொலைவிலிருந்து 50 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளனர்.
இதனால் மில்லியன் கணக்கான யூரோக்கள் பெறுமதியான உணவுப் பொருட்கள் பழுதடைந்துள்ளதாக விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தீ விபத்துகளும் உபகரணங்கள் உருகும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
E-Leclerc, Intermarche, Carrefour, Monoprix மற்றும் Cooperative U ஆகிய பிரான்ஸின் முக்கிய பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் Intermarche மற்றும் அதன் Netto வர்த்தகப் பெயரின் கீழ் இயங்கும் குறைந்தது 300 விற்பனை நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, Cooperative U நிறுவனத்தின் 100 இற்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளும், Carrefour நிறுவனத்தின் 80 விற்பனை நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. Monoprix நிறுவனத்தின் சுமார் 490 விற்பனை நிலையங்களில் 5 சதவீதமானவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த நவம்பர் 2 ஆம் திகதி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டல் கட்டமைப்புகளில் இதேபோன்ற பிரச்சினைகள் பதிவாகியுள்ளன.
பெல்ஜியம், எஸ்டோனியா, அயர்லாந்து, லக்ஸம்பர்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இரவு நேரங்களில் வெப்பநிலை திடீரென அதிகரித்துள்ளதுடன், டசின் கணக்கான விற்பனை நிலையங்களும் உணவுப் பொருள் விநியோக மையம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(AFP/AP)








