இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாகத் திருத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வதற்கான முன்மொழிவை வரவேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்ததை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இலங்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் சில சாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும், தீர்க்கப்பட வேண்டிய பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, தடுப்புக்காவல் உத்தரவுகள் விரைவான மற்றும் பயனுள்ள நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், தடுப்புக்காவல் தொடர்பான மேன்முறையீடுகளை விசாரிக்கும் சுயாதீன மீளாய்வுக் குழு உண்மையான சுதந்திரத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணம் திட்டமிட்ட கொலை அல்லது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட வேண்டும் என்றும், சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் செயல்களை அதில் உள்ளடக்கக்கூடாது என்றும் ஐ.நா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்காக அரசாங்கம் முன்மொழிந்துள்ள திருத்தங்கள் போதுமானவை அல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, குறித்த சட்டமூலங்களுக்குத் திருத்தங்களைச் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் எந்த வகையிலும் போதுமானவை அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.








