எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இச்சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
போட்டி அட்டவணையின்படி, முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 13ஆம் திகதி டெல்லியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வளிமாசடைவு மற்றும் டெல்லி மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கைக்கு இணங்க, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








