அப்ரா அன்சார்
கொழும்பு:உலகப் புகழ்பெற்ற ஸ்மார்ட் சாதன உற்பத்தி நிறுவனமான Xiaomi, தனது புதிய Redmi Note 17 கையடக்கத் தொலைபேசித் தொடரையும் பல்வேறு நவீன ஸ்மார்ட் சாதனங்களையும் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, Redmi Note 17 Pro Max 5G, Redmi Note 17 Pro 5G, Redmi Note 17 5G மற்றும் Redmi Note 17 ஆகிய நான்கு மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கக்கூடிய மின்கலங்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட திரைகள், மேம்பட்ட கமரா தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் ஆகியவை இந்தத் தொடரின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
இதில், Redmi Note 17 Pro Max 5G மாதிரியானது 100W HyperCharge வேகமான மின்னேற்ற வசதியுடன் கூடிய 10,000mAh மின்கலத்தைக் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக மின்னேற்றுவதன் மூலம் மூன்று நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 120Hz வரையான புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட 6.83 அங்குல 1.5K CrystalRes AMOLED திரை, ஒளியியல் பட உறுதிப்படுத்தல் (OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய 50 மெகாபிக்சல் பிரதான கமரா, Snapdragon 6 Gen 5 செயலி மற்றும் Google Gemini தொழில்நுட்பத்தால் இயங்கும் Xiaomi HyperAI வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Redmi Note 17 Pro 5G மாதிரியானது 67W HyperCharge வசதியுடன் கூடிய 8,340mAh மின்கலத்தைக் கொண்டுள்ளது. அதேவேளை, Redmi Note 17 5G மற்றும் Redmi Note 17 ஆகிய மாதிரிகளில் 7,700mAh மின்கலங்களும் 45W வேகமான மின்னேற்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு மாதிரிகளிலும் உயர் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட AMOLED திரைகள், மேம்படுத்தப்பட்ட கமரா கட்டமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட Pro மாதிரிகள் தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாப்புப் பெறும் IP66, IP68, IP69 மற்றும் IP69K சான்றிதழ்களைக் கொண்டுள்ளதுடன், மூன்று மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் தாக்குப்பிடிக்கக்கூடிய வலுவான கட்டமைப்பையும் கொண்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த Xiaomi ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான தலைவர் கைன் வாங்,
வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயனளிக்கும் புதிய தொழில்நுட்பப் புத்தாக்கங்களைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கமாகும். புதிய Redmi Note 17 தொடர் மூலம் உயர் செயல்திறன், நீண்ட மின்கல ஆயுள், உறுதித்தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ஸ்மார்ட் சாதன வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, பொழுதுபோக்கு, ஸ்மார்ட் வீட்டுத் தொழில்நுட்பம், தனிப்பட்ட பராமரிப்பு, சுகாதாரம், உடற்பயிற்சி மற்றும் சமையலறைப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய சாதனங்களையும் Xiaomi அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் கீழ் தொலைக்காட்சிகள், ஒலிபெருக்கிகள், பாதுகாப்புக் கமராக்கள், ஸ்மார்ட் பூட்டுகள், LED விளக்குகள், ரோபோ வெற்றிடச் சுத்திகரிப்பான்கள், காற்றுச் சுத்திகரிப்பான்கள் மற்றும் மின்விசிறிகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், காதொலிக் கருவிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஸ்மார்ட் பேண்ட்கள், ஹெட்போன்கள், ஒலிக் கண்ணாடிகள், தலைமுடி உலர்த்திகள், தலைமுடியை நேராக்கும் கருவிகள் மற்றும் சவரக் கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிப் பிரிவில் ஸ்மார்ட் எடை அளவிடும் கருவிகள், உடல் அளவீட்டுத் தராசுகள் மற்றும் மசாஜ் கருவிகளும், சமையலறைப் பயன்பாட்டிற்காக கலக்கிகள், எண்ணெயில்லா பொரிப்பான்கள், நுண்ணலை அடுப்புகள் மற்றும் நீர் வழங்கும் கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், Xiaomi Tags, மின்கலச் சேமிப்புக் கருவிகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களும் இந்த அறிமுகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் Xiaomi ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான தலைவர் கைன் வாங் மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் சதானி கஜதீர ஆகியோர் புதிய தயாரிப்புகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.
இதன்போது, புதிய கையடக்கத் தொலைபேசிகளின் சிறப்பம்சங்கள், விலைகள், அறிமுகச் சலுகைகள் மற்றும் ஏனைய ஸ்மார்ட் சாதனங்கள் தொடர்பான தகவல்களும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், விருந்தினர்கள் புதிய தயாரிப்புகளை நேரடியாகப் பயன்படுத்திப் பார்வையிடுவதற்கான அனுபவ மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நவம்பர் 2ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தகுதிபெறும் Redmi Note 17 தொடர் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12,000 ரூபா வரையான முதலாவது மாதத் தவணைக் கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்வதுடன், 18 மாத உத்தரவாதமும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், முதல் வருடத்தில் ஒருமுறை இலவசமாகத் திரையை மாற்றிக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுவதுடன், தெரிவுசெய்யப்பட்ட 5G கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்பவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 275GB இலவச இணையத் தரவுச் சலுகையும் வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.











