ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 10 மில்லியன் யூரோ நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த நிதியுதவி ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கையொப்பமிடுவதற்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பசுமை நிலைமாற்ற முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் இரு தரப்புக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது இக்கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களின் இயலளவை மேம்படுத்துதல், ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளை அணுகுவதற்குத் தேவையான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியவையும் இக்கருத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் நான்கு ஆண்டுகளில் இக்கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.








