எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, எரிபொருள் விலை அதிகரிப்பின் அடிப்படையில் பேருந்து கட்டணங்களைத் திருத்துவதற்கான விலைச் சூத்திரத்தின்படி, கட்டண அதிகரிப்புக்கான 4 சதவீத எல்லை எட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய நிலையில் பேருந்து சேவைகளை நஷ்டத்துடனேயே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, குறுகிய தூரப் பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு 1,000 ரூபாவும், நீண்ட தூரப் பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“டீசல் விலை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது. தற்போது டீசல் லீற்றரின் விலை மொத்தமாக 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இது பேருந்து தொழிலுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
எனினும், கொள்கை ரீதியான தீர்மானத்தின்படி, விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் 4 சதவீத அதிகரிப்பு எட்டப்பட்டால் மாத்திரமே பேருந்து கட்டணங்களை உயர்த்த முடியும். தற்போதைய நிலையில் அந்த 4 சதவீத எல்லை எட்டப்படவில்லை.
எனவே, பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு எமக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை. எவ்வாறாயினும், தற்போதைக்கு பேருந்து தொழிலை நஷ்டத்துடனேயே முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது” என்றார்.







