மத்திய கிழக்கிலிருந்து வீதி நிர்மாணத்திற்குப் பயன்படுத்தப்படும் தார் (Bitumen) இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, இலங்கையில் பல வீதி நிர்மாணத் திட்டங்கள் தொடர்ந்து தாமதமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் நிர்மாணத்துறை ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும், வீதி நிர்மாணப் பணிகளுக்கு அத்தியாவசியமான தார் தட்டுப்பாடு முக்கிய தடையாக இருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2026 செப்டெம்பர் மாதத்திற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (PMI) தொடர்பான சமீபத்திய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் நிர்மாணத்துறை செப்டெம்பர் மாதத்திலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்ததுடன், நிர்மாணத்துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 57.8 ஆகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆகஸ்ட் மாதம் 59.4 ஆகக் காணப்பட்டது. சுட்டெண் 50 புள்ளிகளுக்கு மேல் இருப்பது வளர்ச்சியைக் குறிக்கின்ற போதிலும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதை இந்த வீழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக தார் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு தார் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான ஈரானிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தடங்கல்களும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) தகவல்களின்படி, 2026 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலிருந்து ஈரானிலிருந்து மேற்கொள்ளப்படும் தார் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீதி பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
வீதி பராமரிப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக இலங்கைக்கு மாதாந்தம் குறைந்தது 20,000 மெற்றிக் தொன் தார் தேவைப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என்.ஏ. ஹெட்டியாராச்சி முன்னர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், கஸகஸ்தான், பஹ்ரைன், சீனா, இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட மாற்றுச் சந்தைகளிலிருந்து குறைந்தளவிலான தாரைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கு மோதலுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் காப்புறுதிக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தேவையான அளவு தாரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் தொடர்கின்றன.
இதேவேளை, குறிப்பாக அரசாங்க நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் புதிய அபிவிருத்தித் திட்டங்களின் தொடர்ச்சியான வருகை நிர்மாணத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிய நிர்மாணப் பணிகளுக்கான கேள்வியைப் பிரதிபலிக்கும் புதிய கட்டளைகள் சுட்டெண் (New Orders Index), ஆகஸ்ட் மாதம் 62.5 ஆகக் காணப்பட்ட நிலையில், செப்டெம்பர் மாதத்தில் 65.6 ஆக அதிகரித்துள்ளது.
எனினும், நிர்மாணப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்கள் இத்துறையில் தொடர்ந்து காணப்படுகின்றன.
செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புச் சுட்டெண் 58.1 ஆகப் பதிவாகியுள்ளது. இது நிர்மாணத்துறையில் தொடர்ந்தும் புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதைக் காட்டுகின்றது.
இருப்பினும், திறமையான தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்வதில் பல நிர்மாண நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விநியோகஸ்தர்களிடமிருந்து நிர்மாணப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசமும் மேலும் நீடித்துள்ளது. இது விநியோகத் தரப்பிலான அழுத்தங்கள் தொடர்வதை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், புதிதாக வழங்கப்பட்டுள்ள நிர்மாணத் திட்டங்களைக் கருத்திற்கொண்டு, அடுத்த மூன்று மாதங்களில் நிர்மாணத்துறை நடவடிக்கைகள் தொடர்பில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், நிர்மாணப் பொருட்களின் கிடைப்பனவு மற்றும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை ஆகியன இத்துறையின் தொடர்ச்சியான சவால்களாக உள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.








