தெரு நாய்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுடன், அவை தொடர்பான தகவல்களைத் திரட்டும் நோக்கில், ஹோமாகம பிரதேச சபையின் தலையீட்டில் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தெரு நாய் கடித்தல் உள்ளிட்ட அவசரத் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், குறித்த நாய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா, அதன் உடல்நிலை மற்றும் அது காணப்படும் இடம் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்கள் இல்லாத தெரு நாய்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக, காலி சுற்றுலா நகரம் அலைந்து திரியும் நாய்களால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், தெரு நாய்கள் தொடர்பான துல்லியமான தரவுகளையும் புள்ளிவிபரங்களையும் திரட்டுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
இதற்குத் தீர்வாகவே ஹோமாகம பிரதேச சபையினால் இந்த மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றைப் பதிவு செய்தல் தொடர்பான வேலைத்திட்டமொன்று அண்மையில் ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.








