ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வயதான அமெரிக்கர் ஒருவர் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் அமெரிக்கத் தூதர் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அமெரிக்க பழமைவாத ஊடகவியலாளரும் போட்காஸ்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டக்கர் கார்ல்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முகமூடி அணிந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், வயதான அமெரிக்கர் ஒருவரை தடிகளால் தாக்குவதையும், பின்னர் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான வாகனத்தின் மீது பெற்றோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்துவதையும் காட்டும் இதுவரை வெளியிடப்படாத காணொளிக் காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
‘தி டக்கர் கார்ல்சன் ஷோ’ (The Tucker Carlson Show) நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த அமெரிக்கர் கிட்டத்தட்ட மரணிக்கும் அளவுக்குத் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அனுபவிக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலையே இத்தகைய தாக்குதல்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபியை தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் நேரடியாகக் குறிப்பிட்டுள்ள கார்ல்சன், பாதிக்கப்பட்ட நபர் உதவி கோரி தூதரை அணுகியபோதும், அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டித்த அவர், ‘இது வெட்கக்கேடானது. உங்கள் கடமையைச் செய்யுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த தாக்குதலைக் காணொளியாகப் பதிவு செய்த குடும்ப உறுப்பினர் ஒருவர், தனது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதிலிருந்து பின்னர் விலகிக்கொண்டதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
தனது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டால், அந்த ஊரில் இன்னும் வசித்து வரும் தனது உறவினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தவிர்த்ததாகவும் கார்ல்சன் குறிப்பிட்டுள்ளார்.








