அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் தனது ஆயுதப் படையினருக்குச் சம்பளம் வழங்குவதற்குக் கூட நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன், தெஹ்ரான் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஈரான் தனது பொருளாதார ஆதாரங்களை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் கருத்துத் தெரிவித்த அவர், ‘ஒப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast) நடவடிக்கையின் கீழ், ஈரான் ஆட்சி தனது பொருளாதார ஆதாரங்களை இழந்து வருவதுடன், அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்வதில் தெஹ்ரான் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC) தமது சொந்தப் படையினருக்குச் சம்பளம் வழங்குவதிலும் தோல்வியடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹூதிகள், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளுக்கு ஈரான் நிதியுதவி வழங்கும் திறனை அமெரிக்கா முடக்கி வருவதாகவும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதை தெஹ்ரான் தொடர்ந்து முன்னெடுக்க அமெரிக்கா அனுமதிக்காது’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








