2030ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை ஊடாக 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதுடன், 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குக் கவர்வதற்கான இலக்குகளை அடைவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
சுற்றுலாத்துறை சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் முன்னெடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, திருகோணமலை, மட்டக்களப்பு, சிகிரியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டபோது, இந்த ஆண்டில் இதுவரை 10 புதிய சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு விமான சேவைகளை முன்னெடுக்கும் சர்வதேச விமான நிறுவனங்களின் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நாட்டின் பிரபலமான தேசிய பூங்காக்களைப் பயன்படுத்துவது குறித்தும், அதேவேளை வன வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விளம்பரப் பிரசாரங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
சுற்றுலாத்துறையை முறையான கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில், அனைத்து சுற்றுலா ஹோட்டல்களையும் தங்குமிட வசதிகளை வழங்கும் நிறுவனங்களையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் (SLTDA) கட்டாயமாகப் பதிவு செய்வதன் மூலம், அவற்றை உரிய சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளிநாட்டுப் பிரஜைகளால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் அசோக ஹெட்டிகொட, ரிசோர்ட்ஸ் சங்கத்தின் உப தலைவர் ஏக்சத் விஜேரத்ன, அதன் பொதுத் துணைத் தலைவர் டிமிட்ரி கூரி, சிரேஷ்ட முகாமைத்துவக் குழு உறுப்பினர் சமின் விக்ரமசிங்க, பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த பெர்னாண்டோ மற்றும் இலங்கை உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் பொபி ஜோர்டன் ஹான்சன் உள்ளிட்ட சுற்றுலாத்துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அத்துடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் உறுப்பினர்களும் ஏனைய சுற்றுலாத்துறை சங்கங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.








