ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள், நாளை (29) முதல் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், முன்கூட்டியே இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொண்ட பின்னரே பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து, ‘பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுதல்’ என்ற இணைப்பின் ஊடாக இந்த முன்பதிவு வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.








