இலங்கை மத்திய வங்கி (CBSL), தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் மேக்ஸ் அப் மீடியா லிமிடெட் (Max App Media Ltd.) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை இணைத்துள்ளதையடுத்து, அப்பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேக்ஸ் அப் மீடியா லிமிடெட் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேக்ஸ் எல்.கே. (பிரைவேட்) லிமிடெட் (Max LK (Pvt) Ltd.), மேக்ஸ் மீடியா லங்கா (பிரைவேட்) லிமிடெட் (Max Media Lanka (Pvt) Ltd.) ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை முன்னெடுத்தமை, நடத்தி வந்தமை மற்றும் ஊக்குவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) ஆம் பிரிவின் கீழ், திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த நிறுவனங்கள் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் ஏற்கனவே டியன்ஸ் லங்கா ஹெல்த் கேர் (Tiens Lanka Health Care (Pvt) Ltd.), பெஸ்ட் லைஃப் இன்டர்நேஷனல் (Best Life International (Pvt) Ltd.), ஸ்போர்ட் செயின் (Sport Chain), ஒன்மெக்ஸ் டி.டி. (OnmaxDT), எம்.டி.எஃப்.இ. (MTFE), ஃபாஸ்ட்வின் (Fastwin (Pvt) Ltd.), கியூநெட்/குவெஸ்ட்நெட் (Qnet/Questnet), லெட்ஜர் பிளொக் (Ledger Block), பீகொயின் அப் (Beecoin App) மற்றும் டி.எம். அப் (TM App) உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகள் இடம்பெற்றுள்ளன.
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களாக அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை, மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் ஊடாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலில் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.









