சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நவீன சீனாவின் நிறுவனராகவும் விளங்கிய மாவோ சேதுங் (Mao Zedong) குறித்து கேலியாகப் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரமும் ரியல் மெட்ரிட் அணியின் முன்னணி வீரருமான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி ஒன்றில், மாவோ சேதுங்கின் புகைப்படத்தில் தனது முகம் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இணைய மீம் (Meme) ஒன்றைக் குறிப்பிட்ட எம்பாப்பே, சீன சர்வாதிகாரி ஒருவரின் படத்துடன் தனது முகம் இணைக்கப்பட்டிருந்த அந்த மீம், தான் பார்த்ததிலேயே மிகவும் வேடிக்கையானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மாவோ சேதுங் தொடர்பான கேலிச் சித்திரங்கள் மற்றும் விமர்சனங்கள் சீனாவில் உணர்வுபூர்வமான விடயமாகக் கருதப்படும் நிலையில், எம்பாப்பேயின் கருத்து சீன மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தனது கருத்து கவனக்குறைவாக வெளியிடப்பட்டதாகத் தெரிவித்த எம்பாப்பே, சீனாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோரினார்.
பிரெஞ்சு, சீன மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்ட அறிக்கையில், தனது கருத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் ஸ்பெயினின் லா லிகா கால்பந்துப் போட்டி நிர்வாகமும் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த விளையாட்டுப் பான உற்பத்தி நிறுவனமான டொங்பெங் (Dongpeng), பால் உற்பத்தி நிறுவனமான மெங்நியூ (Mengniu) மற்றும் பாலாடைக்கட்டி உற்பத்தி நிறுவனமான மில்க்கிரவுண்ட் (Milkground) ஆகிய நிறுவனங்கள் எம்பாப்பேயுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இரத்து செய்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவகாரத்தின் எதிரொலியாக, சீன அரச தொலைக்காட்சியான CCTV, ஸ்பெயினின் லா லிகா கால்பந்துப் போட்டிகளின் ஒளிபரப்பை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun), சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தவொரு சொல்லும் செயலும் சீன சமூகத்தால் நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.








