இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி அதிக ஆசனங்களைப் பெற்றாலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர் டோவ் வக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் வளாகப் பேராசிரியரான டோவ் வக்ஸ்மன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகுவின் கூட்டணியை எதிர்க்கும் கட்சிகள் இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் சுமார் 68 ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக இருப்பதையும், அவரது தற்போதைய கூட்டணி ஆட்சியில் நீடிப்பதையும் பெரும்பாலான இஸ்ரேலிய வாக்காளர்கள் விரும்பவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. நெதன்யாகுவால் ஆட்சியமைப்பதற்குத் தேவையான கூட்டணியை உருவாக்க முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை என்னால் காண முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரபுக் கட்சிகளை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத கூட்டாளிகளாகச் சித்தரிப்பதற்கு நெதன்யாகு முயற்சிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், கடி ஐசன்கோட் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற ஆதரவைப் பெற்று அரசாங்கத்தை அமைப்பதைச் சிக்கலாக்க நெதன்யாகு முயற்சிக்கலாம் என வக்ஸ்மன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஐசன்கோட் அரசாங்கத்தை அமைப்பதைத் தடுக்க நெதன்யாகுவால் முடிந்தால், மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சூழ்நிலையில், புதிய தேர்தல் நடைபெறும் வரை நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து பதவி வகிப்பார் என்றும், அடுத்த தேர்தலில் சிறந்த பெறுபேற்றைப் பெறுவார் என்ற எதிர்பார்ப்புடன் அவர் செயற்படலாம் என்றும் டோவ் வக்ஸ்மன் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்: அல் ஜசீரா








