லாகூரில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 29 ஓட்டங்களையும், ஹசன் நவாஸ் 17 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஷஹீன் ஷா அப்ரிடி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் அபாரமாகப் பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சஹான் அரச்சிகே 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, எஷான் மாலிங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கின.
மேலும், பவன் ரத்நாயக்க ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 16 ஓட்டங்களையும், அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அரஃபாத் மின்ஹாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், 191 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை அணி போட்டியை முடித்துக்கொண்டது.
இதேவேளை, முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி லீக் போட்டியில் எதிர்வரும் 29ஆம் திகதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கவுள்ளது.








