யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து சவூதி அரேபியாவைப் பாதுகாப்பதற்கு இராணுவ ஆதரவு வழங்க எகிப்து நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான பிராந்திய மோதலில் எகிப்து நேரடியாகத் தலையிடுவதற்கு வழிவகுக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம், எகிப்தின் சுயஸ் கால்வாய்க்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மந்தப் நீரிணைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தனது வளைகுடா நட்பு நாடான சவூதி அரேபியாவை ஹூதி தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி, எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி கடந்த வாரம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அரபு உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான எகிப்து, பிராந்தியத்தின் மிகப்பெரிய இராணுவப் படைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது.
2015 மார்ச் மாதத்தில் யெமன் போர் தீவிரமடைந்த ஆரம்பகட்டத்தில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் எகிப்து இணைந்தது. அப்போது, முக்கியமாகக் கடற்படை ஆதரவை வழங்கியதுடன், சுமார் 800 தரைப்படை வீரர்களையும் அங்கு அனுப்பியது. எனினும், நேரடி போரில் அதன் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.
1991ஆம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பின்னர், எகிப்து பெரிய அளவிலான வெளிநாட்டு தரைப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






