வங்காள விரிகுடாவின் வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், எதிர்வரும் 26ஆம் திகதி காலை வேளையில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த புயல் அமைப்பு இலங்கையை நேரடியாகத் தாக்காது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதன் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.







