இலங்கையில் செயற்படும் நிறுவனங்களின் ஒப்பீட்டளவிலான கடன் தகுதியைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் தேசிய கடன் மதிப்பீட்டு அளவுகோலை மறுசீரமைப்பதாக சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு நாணய வழங்குநர் தவணைமுறித் தவறல் மதிப்பீட்டை (Long-Term Local-Currency Issuer Default Rating – IDR) ‘CCC+’ இலிருந்து ‘B-’ ஆக உயர்த்துவதற்கு கடந்த செப்டெம்பர் 22, 2026 அன்று தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு உயர்வுடன், இலங்கைக்கான எதிர்காலக் கண்ணோட்டம் ‘நிலையானது’ (Stable Outlook) எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மறுசீரமைப்பின் காரணமாக, தற்போது இலங்கையின் தேசிய கடன் மதிப்பீடுகளைக் கொண்டுள்ள சில நிறுவனங்களின் மதிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான மதிப்பீட்டு மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய கடன் மதிப்பீட்டு அளவுகோல்கள், குறிப்பிட்ட சந்தையொன்றில் செயற்படும் நிறுவனங்களின் ஒப்பீட்டளவிலான கடன் அபாயத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் தரவரிசையைத் தீர்மானிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், உள்ளூர் முதலீட்டாளர்கள் வெவ்வேறு நிறுவனங்களின் கடன் அபாய மட்டங்களை ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடியும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் விளக்கியுள்ளது.
இலங்கையின் தேசிய கடன் மதிப்பீடுகள், ஃபிட்ச் ரேட்டிங்ஸின் சர்வதேச மதிப்பீட்டு அளவுகோல்களின் கீழ் வழங்கப்படும் மதிப்பீடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘(lka)’ என்ற குறியீட்டைக் கொண்டுள்ளன.
மேலும், தேசிய கடன் மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸின் சர்வதேச கடன் மதிப்பீடுகளுடனோ அல்லது ஏனைய நாடுகளின் தேசிய கடன் மதிப்பீட்டு அளவுகோல்களுடனோ நேரடியாக ஒப்பிட முடியாது என்றும் அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.








