இலங்கையின் முன்னணி வங்கி ஒன்று, எதிர்வரும் வப் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேடப் பரிசுகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி தொடர்பில் இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) வப் பௌர்ணமி தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு குறித்த வங்கி விசேடப் பரிசொன்றை வழங்குவதாகக் கூறும் செய்தியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக SLCERT தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த வங்கி இவ்வாறான எந்தவொரு பரிசுத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி, பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஏனைய இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மோசடி நடவடிக்கையாக இருக்கலாம் என SLCERT சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய மோசடிகளில் சிக்குவோரின் வங்கிக் கணக்குகள் ஊடுருவப்படுவதற்கான அபாயமும் காணப்படுவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே, இவ்வாறான செய்திகளுடன் பகிரப்படும் இணைப்புகளைச் சொடுக்க வேண்டாம் என்றும், இணையத்தில் பரவும் போலியான பரிசுச் சலுகைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் SLCERT பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.








