நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ரம்புக்கனை மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ரயில் பாதையில் மண் சரிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், குறித்த ரயில் பாதையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் அவசரப் புனரமைப்புப் பணிகளை நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய இரு தினங்களிலும் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்தப் புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறித்த இரு தினங்களிலும் ரம்புக்கனை – பேராதனை மற்றும் கம்பளை இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன.
மேலும், இந்த இரு தினங்களுக்காக முன்கூட்டியே ஆசனங்களைப் பணம் செலுத்தி முன்பதிவு செய்த பயணிகள், தாம் செலுத்திய முழுத் தொகையையும் எந்தவொரு ரயில் நிலையத்திலும் மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.








