வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகளை அண்மித்த வங்காள விரிகுடா பகுதியில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதுடன், அது அடுத்த சில மணிநேரங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வானிலைத் தொகுதி வடமேற்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து ஆழ்ந்த தாழமுக்கமாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டோபர் 26ஆம் திகதி காலை வேளையில் வங்காள விரிகுடாவின் மத்திய மேற்குப் பகுதியில் இது புயலாக வலுவடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, வடக்கு அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, மீனவர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








