அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த ‘CORINTHIAN’ கப்பல் நேற்று (22) நாட்டை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த கப்பலிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க முடியும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக எரிவாயு இருப்பு கிடைத்துள்ளதால், நாடு முழுவதும் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், நுகர்வோர் வழமைபோன்று எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவைக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் லிட்ரோ நிறுவனம் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.








