சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மொலகொட, கொடமுதுன்கல ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், அக்கமஹா பண்டிதருமான சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரிடம் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் இதற்கு முன்னர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உபவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ள அவர், அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், இந்தியாவின் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் சீன மொழி தொடர்பான டிப்ளோமா கற்கையையும் அவர் நிறைவு செய்துள்ளார்.








