நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு எதுவும் இல்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அவர், சில தரப்பினர் தேவையற்ற பொதுமக்கள் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு மோதலுடன் தொடர்புடைய இடையூறுகள் காரணமாக எரிவாயுக் கப்பல் வருகையில் ஓரிரு நாட்கள் தற்காலிக தாமதம் ஏற்பட்டதே அண்மைய விநியோகத் தாமதங்களுக்குக் காரணம் என அவர் விளக்கமளித்தார்.
நாட்டில் போதுமான எரிவாயு கையிருப்புகள் உள்ளதாகத் தெரிவித்த அவர், வழமையாக நாளொன்றுக்கு 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக லிட்ரோ நிறுவனம் நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்களை விநியோகித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புகளும் போதுமான அளவில் பாதுகாப்பாக உள்ளதாக அவர் உறுதியளித்தார்.








