நாடு முழுவதும் டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை இலக்காகக் கொண்டு, விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட திட்டம் நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 104,094 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 79 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கம்பஹா, கண்டி, களுத்துறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 32 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 360 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் சுமார் 175 பிரிவுகள் அதிக டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 13 மாவட்டங்களில் அதிக டெங்கு அபாயம் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரஷில சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு, நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை விசேட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முன்னெடுப்பதன் மூலம், அடுத்த மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.








