கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் ஒரு பகுதியை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்காக, 1.07 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தை Tudawe Brothers (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய வீதிகளை விரிவுபடுத்தி மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், A9 வீதியின் 58+240 கிலோமீற்றர் முதல் 63+000 கிலோமீற்றர் வரையான பகுதியை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.
தேசிய போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் ஊடாக இதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டதாகவும், இதன்போது எட்டு விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கொள்வனவுக் குழு மற்றும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபை ஆகியன குறித்த கொள்வனவு நடைமுறை தொடர்பில் ஆராய்ந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி, எதிர்பாராத செலவுகளுக்கான நிதியையும் உள்ளடக்கிய வகையில், பெறுமதிசேர் வரியை (VAT) தவிர்த்து 1.07 பில்லியன் ரூபாவாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.








