அப்ரா அன்சார்
கொழும்பு;இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் முத்தரப்புத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ராவல்பிண்டியில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் அலி ஆகா 90 பந்துகளில் 107 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது நான்காவது ஒருநாள் சர்வதேச சதமாகும்.
பாகிஸ்தான் அணி 118 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சல்மான் அலி ஆகா அணியைச் சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அவர் ஹசன் நவாஸுடன் இணைந்து 97 ஓட்டங்களையும், அரஃபத் மின்ஹாஸுடன் இணைந்து 64 ஓட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஏஷான் மலிங்க 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
306 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டு இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர். எனினும், ரத்நாயக்க 38ஆவது ஓவரில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு குறையத் தொடங்கியது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் தலைவர் ஷஹீன் அப்ரிடி 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நசீம் ஷா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவூப் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ரஃப் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பாகிஸ்தான் அணியிலிருந்து நாடு திரும்ப அழைக்கப்பட்ட ஏழு வீரர்களில் சல்மான் அலி ஆகாவும் ஒருவராவார். இதன்போது அவர் பாகிஸ்தான் அணியின் டி20 தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
எனினும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முச்சதமும் அடித்த அவர், ஒருநாள் அணிக்குத் திரும்பிய முதல் போட்டியிலேயே சதமடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
முத்தரப்புத் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) ராவல்பிண்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.









