அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் 2027 ஜனவரி மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இதற்கமைய, ஆசிரியர்களின் ஆரம்பச் சம்பளம் 65,000 ரூபாவாகவும், மருத்துவர்களின் ஆரம்பச் சம்பளம் 94,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிக்கவெரட்டியவில் இன்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அபிவிருத்தித் திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரச சேவைகளை மக்களுக்கு வினைத்திறனுடன் வழங்குவதற்கும் வலுவான அரச சேவை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 121,000 புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
இந்த ஆட்சேர்ப்புகள் அரசியல் நியமனங்கள் மூலம் மேற்கொள்ளப்படாமல், போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கிராம உத்தியோகத்தர்கள், பிரிவேனா நிறுவனங்கள் மற்றும் ஆசிரியப் பயிலுநர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு வலுவானதும் வினைத்திறனானதுமான அரச சேவை அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.








