அப்ரா அன்சார்
கொழும்பு:சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 309 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியாவின் தம்மாம் நகரிலுள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் எறிபொருளொன்று விழுந்துள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று அடையாளம் தெரியாத எறிபொருளால் தாக்கப்பட்டு, அதில் தீ பரவியுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ராஸ் அல் கைமா பகுதிக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த பல கப்பல்களின் தலைவர்களுக்கு, வானொலி அறிவிப்புகள் மூலம் தமது நங்கூரமிடப்பட்ட இடங்களிலிருந்து நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ரியாத் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, யேமனின் ஹூதி அமைப்புக்கு எதிராக சவூதி அரேபியாவுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் தொடரும் இந்தச் சம்பவங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.








