தனியார் துறையினரும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு இன்னும் ஒரு வருடத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மெட்ரோ பஸ்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பஸ்கள் அவற்றின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதில்லை எனவும், மிகச் சில பஸ்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இப்பிரச்சினையை ஒட்டுமொத்தத் தனியார் பஸ் உரிமையாளர்களுடனும் தொடர்புபடுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காமல், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய போக்குவரத்து முறைமைக்கு ஏற்ப செயற்படுமாறும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இன்னும் ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பஸ் சேவையைத் தனியார் துறையினருக்கும் திறந்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.








