அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது.
Qdenga எனப்படும் இந்தத் தடுப்பூசியை மருத்துவர்கள் தற்போது பரிந்துரைக்க முடியும் என, அவுஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, முன்னதாக டெங்கு பாதிப்புக்குள்ளானவர்கள், டெங்கு பரவல் அதிகமாக உள்ள நாடுகளுக்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு ATAGI வலியுறுத்தியுள்ளது.
மேலும், டெங்கு பாதிப்பு ஏற்பட்ட வரலாறு இல்லாத, 4 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும் குறுகிய காலப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தால், தனிநபரின் ஆபத்து மற்றும் தடுப்பூசியின் நன்மைகளை மதிப்பீடு செய்த பின்னர் Qdenga தடுப்பூசியை செலுத்திக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் தொற்றுநோய்களில் டெங்கும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 10 கோடி பேர் அறிகுறிகளுடன் கூடிய டெங்கு தொற்றுக்கு உள்ளாகின்றனர் என உலகளாவிய சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் பதிவாகும் டெங்கு தொற்றுகளில் பெரும்பாலானவை, டெங்கு பரவல் காணப்படும் நாடுகளுக்குப் பயணம் செய்து நாடு திரும்பும் பயணிகளிடமே கண்டறியப்படுகின்றன.
அவுஸ்திரேலியர்கள் அதிகம் பயணம் செய்யும் முதல் 10 நாடுகளில் இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, வியட்நாம் மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் டெங்கு பரவல் அடிக்கடி அல்லது தொடர்ச்சியாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








