NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான இறுதிக் கணக்காய்வு அறிக்கை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு விசாரணை நடத்தியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் கண்டறியப்பட்ட அசாதாரண நிலைமைகள், கணக்காய்வு செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபை (SLAAMB) மேற்கொண்ட விசாரணையின் கண்டறிதல்கள் மற்றும் Deloitte Touche Tohmatsu India LLP நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
குறிப்பாக, NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளை அடையாளம் காண்பதில் வெளியகக் கணக்காய்வாளர்கள் தவறியமை தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நிதி முறைகேடுகள் தொடர்பில் நிறுவன நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
NDB வங்கியின் கணிசமான பங்குகள் அரச மற்றும் பொதுமக்கள் நிதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால், இவ்வாறான நிதி முறைகேடுகளினால் அரச நிதி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
இதனிடையே, நிதி முறைமையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக LankaPay ஊடாக மத்தியப்படுத்தப்பட்ட மோசடி கண்காணிப்பு முறைமையை நிறுவுவதற்கான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஒவ்வொரு வங்கியிலும் இடம்பெறும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கான வங்கி மட்டத்திலான மோசடி கண்காணிப்பு முறைமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
ரூ.13.6 பில்லியன் நிதித் தாக்கம்
NDB வங்கியின் நிதி முறைகேடு தொடர்பான இறுதிக் கணக்காய்வு அறிக்கையின்படி, 2016 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 2026 மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடி பரிவர்த்தனைகளினால் ரூ.13,639,664,684, அதாவது சுமார் ரூ.13.6 பில்லியன் நிதித் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 செப்டெம்பர் 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தலின்படி, இதில் 2025ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் ரூ.1.5 பில்லியனும், 2025ஆம் ஆண்டில் ரூ.9.6 பில்லியனும், 2026 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.2.5 பில்லியனும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 6ஆம் திகதி NDB வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப வெளிப்படுத்தலுடன் ஒப்பிடுகையில், அறிவிக்கப்பட்ட மோசடி தொகை ரூ.13.2 பில்லியனிலிருந்து ரூ.13.6 பில்லியனாக ரூ.400 மில்லியனால் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த மோசடி சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முன்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது இறுதிக் கணக்காய்வு அறிக்கையினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
CEFT பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துதல், வங்கியின் அடிப்படை வங்கியியல் முறைமையில் பயனர் செயற்பாடுகள் மற்றும் பயனர் அணுகல் தகவல்களை நிர்வகித்தல் உள்ளிட்ட நிர்வாகக் கட்டமைப்பில் பல குறைபாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பரிவர்த்தனை கண்காணிப்பு, நாளாந்த கணக்கிணக்கம், நிதி இணக்கப்பாடு, உள்ளகக் கணக்காய்வு, கிளை வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வங்கியின் நிர்வாகக் கட்டுப்பாடுகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளும் இறுதிக் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.









