நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வேறு ஆடை அணிவித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமைக்கு முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தமது கடும் கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அரசியலமைப்புக்கும் நீதித்துறைச் செயற்பாடுகளுக்கும் எந்தவித தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதே தமது நிலையான நிலைப்பாடு என மகாநாயக்க தேரர்கள் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், பௌத்த துறவி ஒருவரின் காவி உடையை அகற்றுவதோ அல்லது அவரது பிக்குத் தன்மையை இரத்து செய்வதோ வெறுமனே அரச நிர்வாகம் அல்லது சிறைச்சாலை விதிமுறைகளுக்கு உட்பட்ட விடயம் அல்ல என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள் கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினரின் சாசன ரீதியான கடமைகளுடன் தொடர்புடைய விடயம் என்றும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.







