புதிய கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பை வெளியிட்டதன் பின்னர், கிராம உத்தியோகத்தர் சேவையின் தரம் III-க்கு தெரிவுசெய்யப்பட்ட 1,540 பேருக்கான நியமனக் கடிதங்கள் நாளை (8) காலை ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அலரி மாளிகையில் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு தொடர்பான அறிவிப்பை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளியிட்டார்.
இந்த நியமனங்களை வழங்குவதன் மூலம் கிராம உத்தியோகத்தர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளில் பல்வேறு செல்வாக்குகள் காணப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிதாக 1,540 பேர் நியமிக்கப்படுவதன் மூலம் கிராமப்புறங்களில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை குறைப்பதுடன், ஒரே கிராம உத்தியோகத்தர் பல பிரிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கும் தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த ஆண்டு 1,500-க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களை மேலதிகமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் வருடாந்தம் ஏற்படும் புதிய வெற்றிடங்களைத் தவிர ஏனைய பெரும்பாலான வெற்றிடங்களை நிரப்பி, மேலும் திறமையான பொது சேவையை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கிராமங்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிரதான இணைப்பாக நீண்டகாலமாக செயற்பட்டு வரும் கிராம உத்தியோகத்தர் சேவையில் நிலவி வந்த பல பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், சீருடை கொடுப்பனவு 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுவரை தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தேசிய அபிவிருத்தி நோக்கத்தின் கீழ், கிராமப்புற அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் நிரப்பப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அமைச்சர், புதிதாக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தமது பதவிகளை அடிமட்ட மக்களுக்கான மிகப்பெரிய பொதுச் சேவையாகக் கருதி செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முழுமையான சட்ட நடைமுறைகள் மற்றும் வெளிப்படையான கால அட்டவணையின் அடிப்படையிலேயே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025 மே 26ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட 2460ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








