அமெரிக்க கடற்படையின் Independence வகையைச் சேர்ந்த ‘USS Tulsa’ (LCS 16) போர்க்கப்பல் இன்று (7) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தக் கப்பலுக்கு இலங்கை தரப்பினால் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயம், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை பேணுவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், இலங்கைக்கு வருகை தரும் ஒவ்வொரு அமெரிக்கக் கப்பலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும், இரு நாட்டு கடற்படையினருக்கு இடையிலான உறவுகளையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.
‘USS Tulsa’ இறுதியாக 2025 ஆகஸ்ட் மாதம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தது.
தற்போதைய விஜயத்தின் போது, எரிபொருள் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், இந்தக் கப்பல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது அடுத்தகட்ட பணிகளைத் தொடரவுள்ளது.
அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான கப்பல் விஜயங்கள், தொழில்சார் பரிமாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் ‘Cooperation Afloat Readiness and Training’ (CARAT) உள்ளிட்ட கூட்டுப் பயிற்சிகள் மூலம் நீண்டகாலமாக கடல்சார் ஒத்துழைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
40 கடல் மைல் வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கக்கூடிய ‘USS Tulsa’, ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் திறந்த கடலிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் ஹெலிகொப்டர்கள், சிறிய படகுகள், ஆளில்லா அமைப்புகள் மற்றும் பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கான வசதிகள் காணப்படுவதுடன், கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.
‘USS Tulsa’ 2019 பெப்ரவரி 16ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சேவையில் இணைக்கப்பட்டதுடன், ‘Tough, Able, Ready’ என்ற குறிக்கோளுடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செயல்பட்டு வருகிறது.









