கடந்த வாரம், பிரித்தானியாவின் ஃபேர்ஃபோர்டில் அமைந்துள்ள ரோயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) விமானத் தளத்திற்கு அருகே, பிரித்தானியாவின் வெடிகுண்டு அகற்றும் ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டது.
தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தோன்றியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 85 வீடுகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சில நாட்களுக்குப் பின்னர், ஈரானுக்கு எதிரான தற்போதைய போரில் தாக்குதல்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட B-1 குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா ஃபேர்ஃபோர்ட் விமானத் தளத்திலிருந்து விரைவாக அமெரிக்காவுக்கு திரும்ப அழைத்தது.
தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பில் எவருக்கும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டனர். பின்னர், தனியாக கைது செய்யப்பட்ட பிரித்தானிய-ஈரானிய சந்தேகநபரும் விடுவிக்கப்பட்டார்.
ஃபேர்ஃபோர்ட் விமானத் தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டத்துடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஈரான் மறுத்துள்ளது.







