பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (05) அதிகாலை 4.40 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு கற்கள் விழுந்திருந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளன.
‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
விபத்தில் ரயிலின் முன்பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரயிலின் சாரதி டீ.ஏ.பி. செந்தநாயக, பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்ததாகவும், அதனை அவதானித்தபோது ரயிலுக்கும் மண் திட்டுக்கும் இடையில் சுமார் 10 மீற்றர் தூரமே இருந்ததாகவும் தெரிவித்தார்.
மண் திட்டில் ரயில் மோதியவுடன் தூக்கி வீசப்பட்டதாகவும், அதே வேகத்தில் பாறையொன்றில் மோதியதால் ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.








