கொழும்பு – சவூதி அரேபிய இராச்சியத்தின் புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு உம்ரா யாத்திரை மேற்கொள்ள தெரிவுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கு, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் பொறுப்பதிகாரி யாசர் பின் அப்துல்ரஹ்மான் அல்-ஹஸ்மி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உம்ரா வழிபாடுகளும் புனிதத் தலங்களுக்கான அவர்களின் விஜயமும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவர்களின் பயணம் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைய வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த யாத்திரிகர்கள், பொறுப்பதிகாரிக்கு தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு சேவையாற்றுவதில் சவூதி அரேபிய தலைமையின் முயற்சிகளை அவர்கள் பாராட்டியதுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு உம்ரா யாத்திரையை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் இந்தத் தாராளமான திட்டத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
புனித இரு பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவுத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “புனித இரு பள்ளிவாசல்களின் பாதுகாவலரின் ஹஜ், உம்ரா மற்றும் விஜயத்திற்கான விருந்தினர் திட்டம்”, சவூதி அரேபியாவின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்படும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு பயணம், தங்குமிடம், வழிகாட்டுதல் மற்றும் சமய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விரிவான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும், மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலை தரிசிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.











