கொழும்பு பம்பலப்பிட்டியில் 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலை அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்த உணவகமொன்றுக்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகம், 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்துள்ளது.
எனினும், அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2492/29 இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவு இலக்கம் 96-க்கு அமைய, 500 முதல் 999 மில்லி லீற்றர் வரையான போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறியமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களிலும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக பொருட்களை விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் தங்களுக்கு வழங்கப்படும் கட்டணப் பட்டியலில் குடிநீர் போத்தலுக்கான விலையை சரிபார்ப்பதுடன், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கப்பட்டால் அதற்கான ரசீதுகளை ஆதாரமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான விலை மீறல்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.








