நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கொழும்பு கோட்டை நீதவானால் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவின் மூலம் தாம் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை என்ற பிரதான வழக்கு தொடர்பான மனுதாரரின் நிலைப்பாட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹாந்த அபேசூரிய, நீதியரசர்களான சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெதிகே ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை அறிவித்த தலைமை நீதியரசர் ரோஹாந்த அபேசூரிய, கொழும்பு கோட்டை நீதவானால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்மானம் இறுதியானது அல்ல எனத் தெரிவித்தார்.
அந்தத் தீர்மானம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை ஒன்றை மேற்கொள்ளும் என்றும், முதல் பார்வையில் வழக்குக்கான காரணம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே எதிர்மனுதாரர் தரப்பிற்கு அழைப்பாணை விடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க நீதிமன்ற நிறுவனங்களை அவமதித்தல் தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கு அமைய நீதவானால் இத்தகைய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் முதல் பார்வையில் வழக்குக்கான காரணம் வெளிப்படவில்லை எனத் தெரிவித்த நீதியரசர்கள் குழாம், மனுவை நிராகரித்துள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன, மஹிந்த பத்திரண, சுகீஸ்வர பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, மனோஹர டி சில்வா மற்றும் வி.கே. சொக்சி ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
தமது கட்சிக்காரர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அழைப்பாணை விடுப்பதற்காக நீதவானால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டில் முதல் பார்வையில் வழக்குக்கான காரணம் எதுவும் இல்லை என அவர்கள் வலியுறுத்தினர்.
எனவே, நீதவானின் தீர்மானம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்கு முன்னர் தமது கட்சிக்காரர்களின் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு அவர்கள் நீதிமன்றத்திடம் கோரினர்.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, தாம் இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாகச் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், இந்த வழக்குக்கு அடிப்படையான செம்மைப்படுத்தப்படாத அனைத்து காணொளிகளையும் அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
இதன்படி, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி மீண்டும் அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








