பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்ஓயா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் இன்று (26) அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் படுகாயமடைந்த மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், அவர்களில் ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையின் பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெடிப்பினால் அருகிலிருந்த சில கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்ட போதிலும், வைத்தியசாலையின் ஒரு பகுதியில் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
எனினும், வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து விசாரணை செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.








