எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் PAYE வரி (Pay-As-You-Earn) தொடர்பில் மேலும் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் ஏற்கனவே சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ள போதிலும், தொழில் வல்லுநர்கள் மீதான PAYE வரிச்சுமை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக ஏற்றுக்கொண்டார்.
“தொழில் வல்லுநர்களுக்கான PAYE வரி அதிகமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஒருபுறம் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) உடன்படிக்கையும், மறுபுறம் நாட்டின் நிதி நிலைமையும் இருப்பதால், வரியை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என்பதற்கு வரம்பு உள்ளது” என அவர் தெரிவித்தார்.
எனினும், PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே நிதி அமைச்சின் கொள்கை ரீதியான நிலைப்பாடு என அமைச்சர் குறிப்பிட்டார்.
“PAYE வரியில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே நிதி அமைச்சின் கொள்கை ரீதியான நிலைப்பாடாகும். வரவு-செலவுத் திட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளன” என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், முன்மொழியப்படும் புதிய வரிவிலக்கு வரம்பு அல்லது நிவாரணத்தின் அளவு குறித்து அமைச்சர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இதேவேளை, தற்போதைய பெறுமதி சேர் வரி (VAT) சுமையும் அதிகமாக இருப்பதாக அரசாங்கம் கருதுவதாக அவர் தெரிவித்தார். எனினும், எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் VAT குறைக்கப்படுமா என்பது குறித்து உறுதியான அறிவிப்பை அவர் வெளியிடவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் நிதி நிலைமையைப் பொறுத்தே வரி மாற்றங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தவில்லை எனவும், மாறாக வரி இணக்கப்பாட்டை அதிகரித்து, வீண் செலவினங்களைக் குறைத்ததன் மூலம் அரச வருமானத்தை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுத்து வரும் திட்டத்தின் கீழ் நிதி ஒழுக்கத்தை தொடர்ந்து பேணுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.








